“பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்” - ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை



“ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பை அமுல்படுத்துவதாக ட்ரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், “ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரும்.” என்று கூறி ட்ரம்ப் அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.


இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில்,
“நாங்கள் இப்போதுதான் பாகிஸ்தானுடன் ஓர் ஒப்பந்தத்தை கைசாத்திட்டுள்ளோம். அதன்படி, பாகிஸ்தானும், அமெரிக்காவும் இணைந்து மிகப்பெரிய எண்ணெய் இருப்பை உருவாக்கவுள்ளோம். இது தெற்காசியாவின் மிகப்பெரிய எண்ணெய் இருப்பாக அமையும். இதை முன்னெடுத்துச் செல்லத் தகுதியான எண்ணெய் நிறுவனத்தை தேர்வு செய்து வருகிறோம். யாருக்குத் தெரியும், ஒருநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எண்ணெய் விற்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்து உடனடியாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், பாகிஸ்தானின் கடல் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் குறிப்பிடத்தக்க இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், பாகிஸ்தான் கடல் பகுதியில் கண்டறியப்பட்ட எண்ணெய் வளம், உலகளவில் நான்காவது பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், ட்ரம்ப்பின் சமூக வலைதளப் பதிவை அந்தச் செய்தியுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

‘டெட் எக்கானமி’ - அது மட்டுமல்லாது ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் இந்திய, ரஷ்யப் பொருளாதாரங்களை ‘டெட் எக்கானமி’ ( Dead Economies), அதாவது மிக மோசமான நிலையில், மீட்க முடியாத சூழலில் இருக்கும் பொருளாதாரம் என்று குறிப்பிட்டுள்ளார். “இந்தியா, ரஷ்யாவுடன் என்ன மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபடுகிறது என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால். இரண்டு நாடுகளும் தங்களின் மோசமான பொருளாதார நிலையை இணைந்து இன்னும் மோசமாக்கும்.” என்று கூறியுள்ளார்.

 இந்தியா - பாகிஸ்தான் போரை நானே நிறுத்தினேன் என்று கூறியது, இந்தியாவுக்கு 25வீத இறக்குமதி வரி விதிப்போடு, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக அபராதம் விதித்தது, தற்போது பாகிஸ்தானில் மிகப்பெரிய எண்ணெய் இருப்பை உருவாக்குவதாகவும், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்தடுத்து இந்தியாவை சீண்டி வருகிறார்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறுத்தத்தின் மீதான ட்ரம்ப்பின் உரிமை கோரல் பாராளுமன்றம் வரை விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இனி அடுத்தடுத்த நாட்களில் இறக்குமதி வரியும், எண்ணெய் விவகாரமும் கூட எதிரொலிக்கலாம் அந்நாட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.